×

"500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள்" - வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை!!
 

 

500 மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் (Panic Button) பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் நோக்கம்  பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதும், காவல் துறை மற்றும் மருத்துவ அவசர ஊர்தியின் (Ambulance) கட்டளை மையத்துடன் நேரடி தொடர்பு கொள்வதாகும். இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ண றிவு (Artificial Intelligence) கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) 4G GSM SIM வழியாக கிளவுட் அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும். இம்முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை (Integrated Command and Control Centre) வழியாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 500 மாநகர பேருந்துகளில் முதற்கட்டமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  அதன்படி பேருந்துகளில் மற்ற பயணிகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது அவசர கால பொத்தானை அழுத்த வேண்டும், அவசரகால ஒலி ஏற்படும் போது நிலைமையை கண்காணித்து நடத்துனர் போலீசுக்கு புகார் தெரிவிக்க வேண்டும், காவல்துறை மற்றும் மருத்துவ உதவி (தேவைப்படும் பட்சத்தில்) கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டு உடன் தலைமையக கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.