×

நடுரோட்டில் கழன்று ஓடிய பஸ் டயர்.. பள்ளி மாணவர்கள் காயம் - திருப்பூரில் திக்..திக்! 

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. பள்ளி பேருந்துகள் தரம் குறித்து தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் வகையில் அவ்வப்போது இவ்வாறு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி விவேகம் மேல்நிலைப்பள்ளி பள்ளி வேன் வந்தது. அதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.

அப்போது திடீரென பள்ளி வேனின் பின்பக்க டயர் திடீரென கழன்று ஓடியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பெரு விபத்திலிருந்து காப்பாற்றினார். அதேபோல 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆகவே பள்ளி பேருந்துகள் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே வண்டியின் சக்கரம் கழன்று விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.