×

அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு - நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது சிபிசிஐடி

 

அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பான விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சி.பி.யு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி சண்முகம், ஈ.பி.எஸ் ஆதரவாளரான ஆதிராஜாராம், உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ஓ.பி.எஸ் ஆதரவாளரான பாபு ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த 4 புகார்களின் அடிப்படையில் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட இந்த 4 வழக்குகளும் தமிழக அரசால் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா மற்றும் செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேர் இந்த விசாரணைக்காக ஒரு குழுவாக நியமிக்கப்பட்டனர். இந்த சிபிசிஐடி அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஏழாம் தேதி மற்றும் 15ஆம் தேதி என இரண்டு தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தினுள் சென்று நேரிடையாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரடியாக ஆஜரானார். அதன் பின்பு இபிஎஸ் ஆதரவாளர் சிவி சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.