×

அதிமுக அலுவலக மோதல் - ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி  திட்டம்

 

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடந்த மோதலி போது பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருந்த முக்கிய ஆவணங்கள், இருப்பு தொகை, பத்திரங்கள் ஆகியவற்றை திருடி சென்றதாக சிவி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் எந்த வித நடவடிக்கை எடுக்காததால், உடனடியாக இந்த வழக்கை  சிபி ஐ அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தபால் மூலமாக சிவி சண்முகம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சூரையாடியதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணையை அதிகாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. தொடங்கி உள்ளது.  அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மோதலில் ஈடுபட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது.