×

அதிமுக அலுவலக கலவரம் - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100 பேரிடம் விசாரணை நடத்த திட்டம்

 

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 100 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது  ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் தலா 200 பேர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனிடையே அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சூரையாடியதாக   ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள அறைகளில் சிதறி கிடந்த பொருட்களை தடயவியல் சோதனைக்காக சேகரித்து உள்ளனர்.  இதேபோல் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.  . இரண்டு டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் இந்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க. அலுவலக கலவர வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 100 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் முதல் கட்டமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 100 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்ளது.