×

25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து- மலைப்பாதையில் பதைபதைக்க வைத்த விபத்து

 

அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  35 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 19 பேர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பேருந்து மூங்கில் புதரில் மாட்டியதால் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு மலைப் பகுதியில் உள்ள கொங்காடை என்ற மலை கிராமத்திற்கு இன்று மதியம் அந்தியூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 57 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பருவாச்சி பகுதியைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்பவர் ஓட்டி சென்றார், நடத்துனர் சதாம் என்பவர் பணியில் இருந்தார். பேருந்து தாமரைகரை அடுத்த மணியாச்சிபள்ளம் என்ற இடத்தில்  மலைப்பகுதியில் முதலாவது வளைவில் சுமார் 4 மணி அளவில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் குறுக்கே வந்ததால், பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகே உள்ள 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 

அதிர்ஷ்டவசமாக 10 அடி தூரத்தில் பெரிய மூங்கில் புதரில் பேருந்து மாட்டியதால் அதற்கு மேல் பேருந்து கீழ் செல்லவில்லை. இதற்கு இடையே அரசு பேருந்து பின்னால் சென்று கொண்டிருந்த பிக்கப் பேன் ஓட்டுநர் மணிகண்டன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி பேருந்தில் மாட்டிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு சுமார் பத்து நபர்களை அவரது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தார், தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்து இருந்தார். இதில் 35 பேர் படுகாயமடைந்தனர். 19 பேர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.