×

 #Breaking : சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை.. - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி..

 

யூடியூபர்  சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை  விதித்து  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  


யூட்யூபர்  சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து  தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறான கருத்துக்களை  பதிவு செய்திருந்தார்.  அத்துடன் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என சவுக்கு சங்கர் பேசியிருந்தார்.  இதன் காரணமாக  அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,   நீதித்துறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று நீதிபதிகள் சவுக்கு சங்கரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.  பின்னர் அவர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரியிருந்த நிலையில்,  வழக்கு விசாரணை கடந்த 8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


 
மீண்டும் சவுக்கு சங்கர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது  , அவர் மீது  குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையான குற்றசாட்டை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.   அப்போதும் நீதிபதிகளின் கேள்விக்கு  பதிலளிக்க கால அவகாசம் வழங்குமாறு  சவுக்கு சங்கர் தரப்பில் கோரப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  பேட்டி கொடுத்த உங்களுக்கு தெரியாதா? நீங்களே அறிந்து கொண்டு தான் பேசுனீர்களா? மறந்து விட்டீர்களா என  சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஊடகங்களில்,  சமூக ஊடகங்களில் பதிவு செய்ய மாட்டேன்  என்று உறுதி கூறுங்கள் என நீதிபதிகள் கேட்டதற்கு,   அவ்வாறு உறுதி கூற இயலாது என சவுக்கு சங்கர் பதிலளித்தார்.  

இதனையடுத்து   நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்நிலையின் இன்று மதுரை உயர்நீதிமன்றம் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட குற்ற வழக்கில், அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக  விசாரணை முடிவுற்று  தீர்ப்பு கொடுக்கப்பட  இருந்த  நிலையில்  சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுத்து  அவரைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.