×

 அனைத்துக்கட்சி கூட்ட நாடக மேடையில், நடிகர்களாக பங்கேற்க விரும்பவில்லை..  - பாஜக

 

சமூகநீதிக்கு எதிராக செயல்படும் திமுகவின்  அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக  பங்கேற்க விரும்பவில்லை என்று  பாஜக அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (EWS) அரசியல் அமைப்பு சட்டத்தில் 103 வது திருத்தம் செல்லும்' என்று  கடந்த வாரம் 7ம் தேது ,  ஐவர் நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் தெரிவித்ததால், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கம் போல் திமுக தலைவர், திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இட ஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்திவிட்டது, ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். திமுகவிடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

2019ஆம் ஆண்டு EWS சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. பொருளாதார சூழலை நிர்ணயிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் மத்திய அரசு கொண்டு வந்தது. அவை ,  • ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம் குறைவாக இருக்க வேண்டும்.  • ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் இருக்க வேண்டும். 1,000 சதுர அடிக்கு கீழ் உள்ள வீட்டில் குடியிருக்க வேண்டும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 100 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது, மற்ற பகுதிகளில் 200 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது என்பது போன்றவையாகும்..  தமிழகத்தில் EWS இட ஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள்.  

எனவே, இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை . திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே EWS இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.