×

குடிநீரில் மலம்- குற்றவாளிகளை கைது செய்யாத அரசை கண்டித்து தலைமை செயலகம் முன் போராடுங்கள்: பாஜக

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட  இறையூர் கிராமம் அருகே  உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி  வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர்  மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அக்கிராம மக்களுக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து  சிகிச்சை அளித்த மருத்துவர்கள்   குடிநீரில்தான் பிரச்னை என்று கூறியவுடன்  கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தலா 2 டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “சுமார் 100 தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், தண்ணீர் தொட்டிக்குள் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிறது. தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதும், மக்கள் இந்த தண்ணீரை குடித்தபோது பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதும் தெரியவந்தது. இன்றுவரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும் கைது செய்யப்படாமலும் இருப்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் ஒப்பிடப்பட்ட தமிழக காவல்துறைக்கு இதுவரை எந்த துப்பும் இல்லை. 

இதற்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம். ஆனால் தலித்துகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் முட்டாள்தனமான காரணங்களுக்காக ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அங்கு தங்களின் வீரத்தை காட்டி நாடகம் நடத்த விரும்புகின்றனர்.அவர்கள் அங்கு போராட்டம் நடத்துவதை விட தலைமை செயலகம் முன் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடலாம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். புதுக்கோட்டை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத திமுகவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடாத அதன் தோழமைக்கட்சியின் கோழைத்தனம் அம்பலமாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.