×

பாஜக எம்எல்ஏக்கள் திடீர் வெளிநாடு பயணம்..!

 

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியாக, பாஜக எம்எல்ஏக்கள் திடீர் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்று பிறகு கூட்டணி அரசு பல திட்டங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வருகிறது. முதல்வரை குற்றம் சாட்டி, பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்திலேயே உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இச்சூழலில் என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். 

தற்போது பாஜக எம்எல்ஏக்களும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டனர். அதன்படி இன்று இலங்கைக்கு பாஜக எம்எல்ஏக்கள் சுற்றுப்பயணம் சென்றனர். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாஜக எம்எல்ஏக்கள் ஜான் குமார் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன், நியமனம் எம்எல்ஏக்கள் ராமலிங்கம் அசோக் பாபு வெங்கடேசன் என ஒன்பது பேரும் இலங்கைக்கு புறப்பட்டனர். வரும் 14ஆம் தேதி தான் புதுச்சேரி திரும்ப உள்ளனர். என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  16ஆம் தேதி திரும்ப உள்ளனர். நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சொல்லில் அடிப்படை பணிகளை செய்யாமல் ஆளும் அரசில் உள்ள இரு கட்சி எம்எல்ஏக்களும் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு போட்டி போட்டுச் சென்றுள்ளது மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.