×

ஜெ. மரணம் - ஓபிஎஸ்-சிடம்  விரைவில் விசாரணை!
 

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ்-சிடம் விசாரணை நடத்த ஆறுமுகச்சாமி ஆணையம் முடிவெடுத்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் ஆறுமுகச்சாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது . முதல் நாளான நேற்று அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய அறிவுரைகள் குறித்து மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார் . அதில் 2016ஆம் ஆண்டு பதவியேற்புக்கு முன்பே ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருந்ததாகவும்,  அவரை ஓய்வெடுக்க வற்புறுத்தியும் அவர் ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.  இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையின்படி முறையான சிகிச்சைகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக , மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகச்சாமி ஆணையம் முடிவெடுத்துள்ளது.  வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆறுமுகச்சாமி ஆணையம்  அமைவதற்கு காரணமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.