×

அரசுத் துறைகளுக்கான ஒருங்கிணைப்பின்மைக்கு பலிகடா ஏழைகளா? - ராயப்பேட்டை மருத்துவமனை அவலம் நிறுத்துக!!

 

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரின் மிக முக்கியமான மருத்துவமனையான ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் தண்ணீரும், புறநோயாளிகள் அருந்தும் தேநீரிலும் கழிவுநீர் கலந்து உள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள்தான். ராயப்பேட்டை மருத்துவமனையை தினசரி 3000 புறநோயாளிகளும் 500 உள்நோயாளிகளும் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட மருத்துவமனைக்கான தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம்தான் தினம் முறையாக வழங்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியம் முறையாக வழங்காத போது மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி அதைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கோ குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்காத நாட்களில், வளாகத்தில் வெகுநாட்களாக பயன்படாமல் இருக்கும் கிணற்றின் மூலமாக தண்ணீர் எடுக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. அந்த கிணறு கழிவு நீர் கலந்து கிட்டத்தட்ட ஒரு சாக்கடையாக மாறி பல நாட்கள் ஆகிவிட்டன. புறாக்கள் அதன் மீது இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையில் இருந்து கழிவு நீர் அதில் கலக்கிறது. புதிய புதிய நோய்களை பார்த்து வரும் இந்த சமயத்தில் இதுபோன்ற தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் இடமாக மருத்துவமனையே மாறியுள்ளது பெரும் அவலத்திற்குரியது.

இதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் தேநீர் கடைகள் இந்த தண்ணீரையே பயன்படுத்துவதாக செய்திகள் சொல்கின்றன. புறநோயாளிகள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், அங்கு பணிபுரியும் காவலர்கள் என உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் நோயாளிகளாக மாற்றும் பணியாகவே இது தெரிகிறது.

அந்த கிணற்றை பராமரிக்கவேண்டிய பொதுப்பணித்துறை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் அதற்கான முயற்சிகளை சுகாதாரத் துறையும் எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது. இப்படி அரசாங்கத் துறைகளின் ஒருங்கிணைப்பின்மையால் ஏழை மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாவதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கின்றது. உடனடியாக குடிநீர் வழங்கல் வாரியம் மருத்துவமனைக்கு முறையாக தண்ணீர் வழங்குவதையும், அந்த கிணற்றை பராமரிக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்வதையும் சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது. அதோடு கழிவு நீரை பயன்படுத்தும் அந்த தேநீர் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களை தேடி மருத்துவம் செல்லும் முன், இருக்கும் மருத்துவமனைகளை ஒழுங்காக பராமரிப்பது முதல் தேவை என்ற அடிப்படையை நினைவூட்ட விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.