உயிருடன் உள்ளார் ஆற்காடு வீராச்சாமி! - ஆனால்.. வைரலாகும் அண்ணாமலையின் தவறான பேச்சு
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி காலமாகி விட்டதாக தமிழக பாஜக தலைவர் பேசிய தவறான பேச்சின் வீடியோ பாஜகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அண்ணாமலை பேசிய தவறான தகவல் என்பது தெரியாமல் அந்த வீடியோ அவரது ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதால் திமுகவினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த புதன்கிழமை அன்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசினார் . அப்போது, ’’ஆற்காடு வீராசாமி அண்ணன்.. ’’என்று ஆரம்பித்தவர், ’’அவர் இப்ப இல்ல.. இறைவனடி சேர்ந்துவிட்டார்’ என்று சொன்னார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘’அவர் மெடிக்கல் அட்மிஷன் எப்படி நடக்குது என்பது பற்றி சூப்பரா ஒரு விசயத்தை சொல்லி இருக்கிறார்’’என்று பேசினார்.
ஆனால் 85 வயதாகும் திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி உயிருடன் உள்ளார் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு கூட சென்னை வந்தபோது ஆற்காடு வீராசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அண்ணாமலை சொன்ன அந்தப் பேச்சின் வீடியோ பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உண்மை தன்மையை அறியாமல் அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருவதால் திமுகவினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.