×

 MBA, MCA படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

 

 MBA, MCA படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.  

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக  தொழில்நுட்ப கல்வி இயக்ககம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம்,  வட்டார மையங்கள்,  சென்னை பல்கலைக்கழகம்,  இதர பல்கலைக்கழகங்கள் , சுயநிதி பொறியியல் கல்லூரிகள் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும்  கல்வி நிலையங்களில்  எம்பிஏ மற்றும் எம்சிஏ  படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, www.gct.ac.in மற்றும்  www.tn-mbamca.com  என்கிற இணையத்தளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்  என்றும்,  இரண்டு பட்டப் படிப்புகளும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் ( ஜூலை 11 -  திங்கள்கிழமை )  ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும்,   கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in மற்றும்  www.tn-mbamca.com இணையதளத்தை பார்க்கலாம் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது