×

கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்பதை என்ஐஏ உறுதி செய்துள்ளது- அண்ணாமலை

 

கோயம்புத்தூரில்  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார்.   விசாரணையில் அவர் பெரும் சதி திட்டத்துடன் செயல்பட்டதும்,  ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் கண்டறியப்பட்டது.  இதன் பின்னர்  முபினுடன் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சில இடங்களில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை சம்பவத்தை இனி சிலிண்டர் வெடிப்பு என கூற முடியாது. கோவை சம்பவத்தை குண்டு வெடிப்பு வழக்கு என தேசிய புலனாய்வு முகமை அழைத்துள்ளது. கோவை சம்பவத்திற்கு பிறகு நடத்திய சோதனையில் திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது. நடந்தது தற்கொலைப் படை தாக்குதல் முயற்சி என பாஜக கூறி வந்ததை என்.ஐ.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. 

தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜமேஷா முபினுடன் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டியதையும் என்.ஐ.ஏ உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் வேரூன்றி விட்டார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.அவர்கள் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி இயங்கியதை இன்றைய என்.ஐ.ஏ சோதனைகள் அம்பலப்படுத்தியுள்ளன.தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் செயலற்ற தன்மையால் நிகழவிருந்த பெரும் உயிர் சேதத்திலிருந்து நம்மை இறைவன் தான் காப்பாற்றினார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.