×

இந்திய உளவுத்துறை எச்சரித்த பின்பும் உறக்கமா?- அண்ணாமலை

 

கடந்த 23 ஆம் தேதி கோவை மாநகர உக்கடம் பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ முபின் என்பவர் மரணமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறை விரைந்து செயல்பட்டு, சமூகவிரோத சதிவேலை திட்டத்தை முறியடித்து, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்தவுடன் தமிழ்நாடு டிஜிபி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். தனி போலீஸ் படைகள் அமைத்து விசாரணையும் தொடர்கிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் திட்டமிடப்பட்டிருந்த தற்கொலைப்படை தாக்குதல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அல்ல, வெடிபொருள் எடுத்து சென்ற வாகனம் இறைவன் அருளால் விபத்திற்கு உள்ளானதால் பொதுமக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு திமுக அரசின் மெத்தன போக்கு தான் முழுமுதல் காரணம்.

அக்டோபர் 182022 அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, PFI என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த பின் பல இடங்களில் தாக்குதல் நடத்த சொல்லி அந்த அமைப்பின் தலைவர்கள் தொண்டர்களிடம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சாராய அமைச்சர் இதைப் பற்றி குறிப்பிட மறந்து விட்டார். இப்படி ஒரு எச்சரிக்கை வந்த பின்பும் தமிழக அரசு உறங்கி கொண்டிருந்தது ஏன்?

2019-ல் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பிறகு முபினை கண்காணிக்குமாறு தமிழக உளவுத்துறை மற்றும் கோவை காவல்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கண்காணிப்பை நிறுத்தியது ஏன்? அரசியல் அழுத்தங்களால் அவர் கண்காணிப்பு வளையத்திலிருந்து விலக்கப்பட்டாரா? பெரும் உயிர் சேதம் அரசின் மெத்தன போக்கால் நிகழ்ந்திருக்கும் தமிழக முதல்வர் பதில் அளிப்பாரா அல்லது வழக்கம் போல் மௌனமாக இருந்து மக்களை திசைதிருப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாரா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.