×

அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறது- அண்ணாமலை

 

ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சின்னப்பா கணேன் என்பவர் எழுதிய 'மோடியின் தமிழகம் ' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற  தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பால் விலை உயர்வால் விவசாயிகளுக்கு 3 ரூபாயும் ஆவினுக்கு 12 ரூபாய் லாபமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு எந்த பலனும் தராத  பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15-ம் தேதி, தமிழகத்தின் அனைத்து ஒன்றிய தலைநகரங்கள் 1200 இடங்களில் தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும். 

தமிழகத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி என்பதால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை. தேசிய ஐனநாயக  கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து இல்லாமல் பாஜகவினர் அனைத்து தொகுதியிலும் வேலை செய்துவருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதியின் தன்மை மாறும். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்து அபத்தமானது. தமிழகத்திற்கு விரோதமாக ஆளுநர் இருக்கிறார். திமுக, ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்ட வேண்டும், ஆளுநருக்கு எதிரான மனநிலையில் இருந்து திமுக வெளிவர வேண்டும். திருமாவளவனுக்கு வேலை இல்லாமல் மனுஸ்மிருதியை பிரதி எடுத்து வழங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். குறித்த அம்பேத்கர் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும். திருமாவளவன் பிரதி எடுத்து  கொடுக்கும்  மனுஸ்மிருதியின் மொழி பெயர்ப்பு தவறானது. 

அமித்ஷா வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் வரவில்லை. தமிழகம் வரும் பிரதமருக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு வழக்கப்படும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு வெளியான 7 இடங்களில் காங்கிரஸ் பல இடங்களில் டெபாசிட் பெறவில்லை. 2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும்” எனக் கூறினார்.