×

அரசு பள்ளிகளின் பராமரிப்புக்காக ரூ.119.27 கோடி மானியம் ஒதுக்கீடு- அன்புமணி ராமதாஸ் பாராட்டு

 

37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக  ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடனேயே இந்த மானியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாகியும் மானியம் வழங்கப்படவில்லை என்பதை கடந்த 28-ஆம் தேதி சுட்டிக்காட்டியிருந்தேன். அதைத் தொடர்ந்து மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.



பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை செய்து கொடுக்க இந்த நிதி உதவும்.  இந்த நிதியை பள்ளி நிர்வாகங்கள் பொறுப்புடனும், அவசியத் தேவைகளுக்காகவும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.