×

"ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் அஜித்" - கடம்பூர் ராஜூ பேட்டி!!

 

 நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெ.பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதுவொருபுறமிருக்க நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம்  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும், பாசமும், பக்தியும், மரியாதையும் உள்ளவர் நடிகர் அஜித்குமார். இரண்டு முறை அவரை நேரில் அழைத்து ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார் மனதளவில் மறைந்த ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் அஜித். ஆனாலும் அவர் அரசியல் சாயம் இல்லாமல் சினிமா துறையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும்  ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மானசீகமாக யாராவது ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். அப்படித்தான்  ஜெயலலிதா பிறந்தநாளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது.  ஜெயலலிதாவின் பிறந்தநாளில் வெளியாகியிருப்பது மேலும் சிறப்பு " என்றார்.