×

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

 

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சார்பில் தொடங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக அலுவலக சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்முறையை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தது என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது கட்சி அலுவலகத்தை நிர்வகிப்பது யார்? என நீதிபதி கேள்விக்கு மகாலிங்கம் என்ற  மேலாளர் என்று காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து காவல்துறை சார்பில் காலை 8.30 மணியளவில் பன்னீர்செல்வம் தரப்பினர் தலைமை அலுவலகத்துக்கு வந்து விட்டனர். அப்போதே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் வந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது என்று கூறி  சிசிடிவி காட்சிகள், வீடியோ காட்சிகளை நீதிபதி லேப்டாப் மூலம் பார்வையிட்டார். போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கூடுதல் ஆணையர், இணை துணை ஆணையர்கள், உதவி ஆணையர் என அனைத்து அதிகாரிகளும் இருந்தனர். பொதுமக்கள் யாருக்கும் காயம் இல்லை. இந்த வழக்கு யாரிடம் சாவியை ஒப்படைப்பது தொடர்பாக இல்லை, அதிமுக கட்டிடம் தொடர்பாக எந்த சிவில் பிரச்சினையும் இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
நுழைவாயிலில் எப்படி நுழைந்தார்கள் அந்த வீடியோ காட்சிகள் எங்கே? என நீதிபதி குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். தடியடி நடத்திய பிறகு தான் காவல்துறை தரப்பில் வீடியோ எடுக்கப்பட்டது. சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது. ஆனால் இந்த வழக்கில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. 
பொது அமைதிக்கு  குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது. தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம். இரண்டு தரப்பினருமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தனது வாதத்தை எடுத்துவைத்தது. 

பொது சொத்து சேதம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் சேதத்தொகையை வசூலிக்கும்? விதியை பயன்படுத்தியுள்ளீர்களா? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, பயன்படுத்துவோம் என காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது. காவல்துறை தெரிவித்துள்ள அறிக்கை குறித்து ஆட்சேப மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம் என்ற ஓபிஎஸ் தரப்பு ஜூலை 11 ஆம் தேதி காலை வரை இருவரின் கட்டுப்பாட்டில் தான் தலைமை அலுவலகம்  இருந்தது என்றும், கட்சியில் எனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தது. பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் இ.பி.எஸ் பக்கம் இருப்பதாக கருத முடியாது எனவும் கட்சியில் எனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது, கட்சி அலுவலகம் அவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்?- ஒபிஎஸ் அணி நுழைந்த போது  கட்சி அலுவலகத்திற்கு தலைமை கழக செயலாளர் என்ற பொறுப்பு இருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பால் அலுவலகம் சூறையாடப்பட்டு, கட்டிடத்தின் மாடியிலிருந்து ஆவணங்கள் வீசப்பட்டன என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழு நடக்கும் போது கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை. மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர். அப்படி தான் ஓபிஎஸ்- ம் அங்கு சென்றார். அங்கு நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே ஆட்கள் நுழைவதை தடுத்தனர், நான் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய கூடாது  என்று எந்த நீதிமன்றம் கூறவில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.