×

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரம் - 63 யூடியூப், 31 ட்விட்டர் கணக்குகளை முடக்க நடவடிக்கை..!

 

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான, மூடி திரையிடப்பட்ட விசாரணை அறிக்கையை  தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  அதில்,  இந்த வழக்கு தொடர்பாக 63 யுடியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில்,    அறிக்கை  தாக்கல் செய்யுமாறு  தமிழ்நாடு அரசுக்கு   நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,  உடற்கூறாய்வு முடிந்து  உடல் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்,   இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டதாகவும் கூறினார்.  அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.  மேலும், காவல்துறை தரப்பில் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை ஒன்றையும்  தாக்கல் செய்தார்.  பின்னர் டி.ஐ.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

அத்துடன்  மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யுடியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்களின்  பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.  இதுபோன்ற  ஊடக விசாரணைள்   காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.   மாணவி மரணம் தொடர்பாகவும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாகவும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட  அரசு தரப்பு  அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,   யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும்  விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசால் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு,  குறிப்பிட்ட அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  தொடங்கப்பட்டுள்ளதாகவும்,   பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  குறிப்பிட்ட அவர்,  நிலைமை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது என்றும், விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளைத் தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதி,  இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்த  வேண்டாம் என அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும்  அறிவுறுத்தினார்.   மேலும் ஊடகங்கள் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்ந்து  முன்னிலைப் படுத்தப்படுவதால்,  இதனை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும்  மோசமடைவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாகத் தெரிவித்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.  மேலும்   வழக்கு  விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.