×

”தமிழ்நாடு என சொல்ல ஆளுநருக்கு உரிமை இல்லை”

 

அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ‌.கே.ராஜன் உரையாற்றினார். 


2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தினார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


இந்நிலையில் கருத்தரங்கில் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ‌.கே.ராஜன் , “அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என உள்ளதை, அப்படி சொல்ல மறுப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேரவையில் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் ஆளுநரின் பணி. மாறாக, ஒப்புதல் கையெழுத்து போட மாட்டேன் என சொல்வது ஆளுநரின் பணி அல்ல. அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அப்படியே வைத்துக்கொண்டு இருப்பது சிறுபிள்ளை தனமான விளையாட்டு போன்றது.

அரசால் தரப்படும் உரையை பேரவையில் படிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை. அதிலுள்ளவற்றை நீக்கியோ, சேர்த்தோ படிக்க முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே. ஆளுநர் உரை குறித்து முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது மிகச் சரியான ஒன்று. அதுதான் அரசியலமைப்பு சட்டமும் கூட” எனக் கூறினார்.