×

எடப்பாடி பழனிசாமி  கைதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்!!

 

எடப்பாடி பழனிசாமி  கைதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நேற்று அறிவிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதன் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக இன்று ஈபிஎஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் ,சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டம் செய்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதிமுக தலைமை கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில், காவல்துறையை ஏவல் துறையாக நடத்தி சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கும் விடியா திமுக அரசு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரையும் அஇஅதிமுக பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களையும் முறையற்ற வகையிலும் அராஜகப் போக்கிலும் கைது செய்திருப்பது சட்ட விரோதம். சட்டத்தை எப்போதும் மதிக்கும் ஒரே இயக்கம் அஇஅதிமுக! எதிர்க்கட்சியின் உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு இனி அழிவு காலம் தான்.என்று குறிப்பிட்டுள்ளார்.