×

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடக்கம் - இபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் 

 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்திற்கு வந்து எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ. பன்னீர் செல்வமும் இரு அணியாக பிரிந்தனர்.  இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். அதிமுகவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இருந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் . இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகேஸ்வரி,  ரிஷிகேஷ்வராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.   மூன்று நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பு வாதங்கள் நடந்து வந்தன.  இதை எடுத்து வழக்கின் மறுவிசாரணை பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.  இன்றைய விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் தொடங்கி மும்முரமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது. ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் என இ.பி.எஸ். தரப்பு வாதத்தை முன் வைத்தது.