×

அதிமுக பொதுக்குழு : ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை..

 

அதிமுக பொதுக்குழு செல்லாது என்கிற  தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ,  ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு  மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது.  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.  

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது  செல்லாத நிலை ஏற்பட்டது.  அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ,  தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.  அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.  இந்த வழக்கு  இன்று காலை   நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது, இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க இருக்கின்றனர்.