×

அதிமுக பொதுக்குழு வழக்கு - விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

 

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருதரப்பினரும் பரபரப்பான வாதங்கள் முன்வைத்த நிலையில் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் புதிய நிர்வாகிகள் பலரும் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறியீடு செய்தார். அதில், நீதிபதிகள் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு அளித்தனர். 

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது.  

இன்று விசாரணைக்கு வந்த போது பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் பரபரப்பு வதங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாகஅதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர். கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர். பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும்" போன்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் நாளை வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.