×

அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் - ஈபிஎஸ் அறிவிப்பு 

 

அதிமுக மாணவரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் 25.1.2023 புதன் கிழமை அன்று, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களில் “வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும்; கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.