×

"அதிமுக பொதுக்குழு வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும்" - திருப்பியனுப்பிய உச்ச நீதிமன்றம்
 

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில்  உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .இதில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொது குழு விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தடைகேட்டு தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கியது. இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. ஜூலை 11 பொதுக்குழுவில் நடந்தது என்ன? என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்போ, அதிமுக பொதுக்குழுவில் கட்சியின்  முக்கியமான பலர் விதிகள் மீறப்பட்டுள்ளன. கட்சியின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது  என்று தெரிவிக்கப்பட்டது. 

பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளது ? என்றும் சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா என்றும் ஓபிஎஸ் கொடுத்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சமரசத்திற்கு தயார் என்று ஓபிஎஸ் தரப்பும் , ஆனால் நாங்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று  எடப்பாடி பழனிசாமி தரப்பும் பதில் அளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர்நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக திருப்பி அனுப்புகிறோம். அதிகப்பட்சம் மூன்று வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.