×

போதை பொருளால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி- ஆர்.பி.உதயகுமார்

 

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கட்சி நிர்வாகிககளை சந்தித்து தனது இல்ல திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “திமுக ஆட்சியின் மீது மக்கள் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமே கிடைக்கவில்லை. பள்ளி மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் வகையில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறிய திமுக அரசை நம்பி அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அரசு ஊழியர்கள் தற்போது திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் தான் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் வஞ்சிக்க கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. அரசை தாங்கிப் பிடிக்கின்ற அரசு ஊழியர்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை எதிர்பார்த்து தாய்மார்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பொங்கலுக்கு ஒரு கரும்பு கூட வழங்காமல் அதையும் போராடி தான் பெற வேண்டி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது” என பேசினார்