×

ஜெயலலிதாவை ‘ராட்சசி’ என விமர்சித்த கேகேஎஸ்எஸ்ஆருக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

 

நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “பெருந்தலைவர்கள் உள்ள தமிழ்நாட்டில் ராட்சஸியை அறிமுகம் செய்து, நல்லா இருந்த நாட்டை நாசம் ஆக்கியதில் எனக்கும் பங்குள்ளது. 10 ஆண்டுகள் நாடு நாசமானது, வீட்டைவிட்டு ஐதரபாத்துக்கு செல்கிறேன் எனக் கூறிய ஜெயலலிதாவை, நானும் திருநாவுக்கரசும் அம்மாவை தடுத்து நிறுத்தினோம், அந்த பாவத்தின் பலனை இந்த நாடு 10 ஆண்டுகள் அனுபவித்தன. அதையெல்லாம் மாற்றி தளபதி இன்று மிகச்சிறந்த, பார் போற்றும் ஆட்சியை நடத்திவருகிறார்.” எனக் கூறியிருந்தார்.


இதற்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் …நாவடக்கம் தேவை.. தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருப்பதற்கு காரணம் அம்மா அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் தான், இன்றைக்கும் தீண்டாமையை ஊக்குவிக்கும் நீங்கள் சமூகநீதி காத்த மக்கள் தலைவி குறித்து பேச அருகதை அற்றவர்கள். நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி மறந்த உங்களுக்காக ஆரம்ப காலங்களில் பல தேர்தல்களில் உழைத்து அதிமுக- தான் தவறிழைத்துவிட்டது. விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் அம்மா அவர்கள் தான் என்பதை  மறந்துவிடாதீர்கள். "யாகாவாராயினும் நாகாக்க"” எனக் குறிப்பிட்டுள்ளார்.