×

இதனால்தான் அதிமுக ஆட்சியில் கடன் வந்தது- முன்னாள் அமைச்சர் தங்கமணி பளீர் பேட்டி 

 

அ.தி.மு.க ஆட்சியில் ரூ.60,000 கோடிக்கு பல்வேறு புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது அது தான் கடன் சுமை அதிகரிக்க காரணம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, “மின்கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும், வாக்களித்த மக்களை தி.மு.க அரசு எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைக்கப்பார்க்கிறார்கள்.  குறிப்பாக இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். இதனால் லட்சக்கணக்கான விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வாக்களித்த மக்களை தி.மு.க அரசு ஏமாற்றி வருகிறது. எப்பொழுது தேர்தல் வரும் என மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலிருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோப்புகளுடன் பணத்தையும் எடுத்து சென்று விட்டார்கள் என சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அங்கு என்ன காணாமல் போனது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் சி.வி.சண்முகம் அனைத்தையும் பார்த்து விட்டு தான் புகார் அளித்திருப்பார்.

உதய் மின் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மற்றும் விவசாய மின்சாரத்திற்கு மீட்டர் வைப்பது ஆகியவை இருந்தது. அந்த இரண்டையும் நீக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதன்படி அவை இரண்டும் நீக்கப்பட்டது. அதன் காரணமாகவே அத்திட்டத்தில் கையெழுத்திட்டோம். அதனால் ரூ.22,815 கோடி கடனை ஏற்றுக்கொண்டார்கள். பா.ஜ.க என்பது தனி கட்சி, அ.தி.மு.க என்பது தனி கட்சி. எங்களின் கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. எடப்பாடி பழனிச்சாமியை மோடி சந்திக்கவில்லை என கூறுவது தவறு. மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்கவே இல்லை. மின் துறையில் ரூ.60,000 கோடிக்கு பல்வேறு புதிய திட்டங்களை அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்தோம். அதன் காரணமாகவே கடன் சுமை அதிகமானது. மின்துறை, போக்குவரத்து துறை ஆகியவை சேவை துறைகள் இவற்றில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. குட்கா வழக்கு, டெண்டர் வழக்கு போன்றவற்றின் வழக்கு விசாரணை தொடர்பான கேள்விக்கு எந்த வழக்காக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்” என்றார்.