×

அருவிக்கு அருகே இளம்பெண் எலும்பு கூடு கண்டெடுப்பு

 

ஆந்திர மாநிலம் கைலாச கோனா நீர் வீழ்ச்சி அருகே  சுடிதார், செருப்புடன் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை  என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்திய நாராயணவனம் காவல் துறை, எலும்பு கூடாக மீட்கப்பட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே கைலாச கோனா என்ற நீர் வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் பெண் ஒருவரின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் பகுதியை சேர்ந்த மதன் என்பவரும், புழல் கதிர்வேடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாகவும்,  கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழ்செல்வியை காணவில்லை என அவரது பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மதனை விசாரத்த போது,  தமிழ்செல்வியை கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆந்திர மாநில சுற்றுலா தலமான கைலாச கோனே அருவி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தியதாகவும், அதன்பின் அங்கேயே விட்டு விட்டு திரும்பியதாகவும் மதன் கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்ததால் செங்குன்றம் காவலர்கள் மதனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் தமிழ்செல்வி இல்லாததால் அந்த மலையில் இருந்த வனத்துறை அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், ஒரு வாரமாக நாராயணவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இதனிடையே மகளை காணவில்லை எனவும், மகளுக்கு என்ன நேர்ந்தது எனவும் கூறி அவரது பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைலாச கோனாவில் பெண் ஒருவரின் எலும்பு கூட்டை நாராயணவனம் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அந்த இடத்தில் பெண்ணின் செருப்பு, சுடிதார் ஆகியவை  மீட்கப்பட்டுள்ளதால்  பெண்ணின் எலும்பு கூடாக இருக்கலாம் எனவும், அது யார் என்பது குறித்து நாராயணவனம் காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். செங்குன்றம் காவல்துறையினரும் காணாமல் போன தமிழ்ச்செல்வியின் பெற்றோரை அழைத்து சென்று எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண முயற்ச்சித்தனர். ஆய்வறிக்கை வந்த பின்னரே உயிரிழந்தது யார் என  தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.