×

 வீடு புகுந்து கதற கதற கடத்திச்செல்லபட்ட இளம்பெண்..  காதலிக்க மறுத்ததால் திரைப்பட  பாணியில் அரங்கேறிய சம்பவம்.. 

 


மயிலாடுதுறையில்  காதலிக்க மறுத்த பெண்ணை திரைப்பட பாணியில் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக 15 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற வீடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்ச மேட்டுத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஸ்வரன். 32 வயதான இவர் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கி இருந்தபோது,  அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் ( 21)  ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பழகி வந்த நிலையில்,  விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை  அந்த பெண் நிறுத்தியிருக்கிறார். அதன் பின்னரும்  அப்பெண்ணை  காதலிப்பதாகக்   கூறி தொடர்ந்து விக்னேஸ்வரன் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பெண்ணின் வீட்டிற்குச் சென்றி  தகராறிலும்  ஈடுபட்டிருக்கிறார்.  இது குறித்து அந்தப் பெண்ணின் வீட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 2  முறை புகார் அளித்திருக்கின்றனர்.  புகாரின் பேரில் காவல்துறையினரும் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.  ஆனால் மீண்டும் அவரை தொந்தரவு செய்த விக்னேஸ்வரன்,  கடந்த ஜுலை மாதம் 12 ஆம் தேதி   பெண்ணை கடத்த முயன்றுள்ளார்.  

அவரிடம் இருந்து தப்பித்து வந்த இளம் பெண் மீண்டும் இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  அதன்பின்னர் அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்ட விக்னேஸ்வரன்,  தன் நண்பர்கள் உள்பட உடன் 14 பேரை சேர்த்துக்கொண்டார்.  இந்நிலையில் நேற்று இரவு ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும்  இரு சக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்த  விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 15 பேர் , அவரது தாயாரை தள்ளி விட்டு  வலுக்கட்டாயமாக அப்பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.   இதுகுறித்த சிசிவிடி காட்சிகள் வெளியாகி பதைக்க வைக்கின்றன.  அந்த வீடியோவில் அப்பெண்ணும், அவரது தாயாரும் கதறுவது கலங்க வைக்கிறது.

பின்னர்  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த   மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார்,   சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.   கடத்தல் சம்பவத்தை  குறித்து   மாவட்டம் முழுவதும் மற்றும்  அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு,  தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் மயிலாடுதுறையில் கடத்திச் செல்லப்பட்ட இளம் பெண் நான்கு மணி நேரத்தில் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே மீட்கப்பட்டார்.

 காரில் இருந்த விக்னேஸ்வரன் அவரது நண்பர்கள் சுபாஷ் சந்திர போஸ் செல்வகுமார் மற்றும் அந்தப் பெண் ஆகிய நான்கு பேரையும் மீட்ட விக்கிரவாண்டி போலீஸார், அவர்களை  மயிலாடுதுறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  பெண் கடத்தல் வழக்கில் மூன்று பேர் கைதாகி இருக்கும் நிலையில்,  தப்பி ஓடிய மேலும் 12 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.