×

பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகமாடியது அம்பலம்

 

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த அரவிந்த் ஷர்மா(42) என்பவர் நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 12 வயது மகன் மிதிலேஷ் குமார் ஷர்மா கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும், வழக்கமாக ஆட்டோ ஓட்டுனர் சீனிவாசன் என்பவர் தனது மகனை பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் பள்ளி முடிந்த பின்பு ஆட்டோ ஓட்டுனர், மிதிலேஷை ஆட்டோ அருகே நிற்குமாறு கூறி விட்டு மற்ற மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளிக்குள் சென்ற நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மகன் மிதிலேசை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னல் அருகே சென்ற போது சிறுவன் மிதிலேஷ் ஆட்டோவில் இருந்து குதித்து, பின்னர் மெட்ரோ ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தப்பி வந்து, அங்கிருந்த காவலர் ஒருவரிடம் செல்போனை வாங்கி  தாத்தாவிற்கு தான் கடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் மிதிலேஷ் பயந்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், என புகாரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன் பேரில் போலீசார் சிறுவன்  பள்ளி அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பச்சையப்பன் சிக்னல் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த இடத்தில் சிறுவன் கடத்தப்பட்டதற்கான ஒரு தடயமும் போலீசாருக்கு தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சிறுவனை அழைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. 7ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய சிறுவனுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால், தேர்வுக்கு  பயந்து பல முறை பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் பெற்றோர் இதை பொருட்படுத்தாமல் பள்ளிக்கு அனுப்பி வந்ததாகவும் சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடத்தல் நாடகமாடினால் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பமாட்டார்கள் என திட்டம்போட்டு, பள்ளி முடிந்த பின்பு ஆட்டோ ஏறாமல் பேருந்து மூலமாக பச்சையப்பன் கல்லூரி சிக்னலுக்கு சென்றதும்  பின்பு சிறிது நேரம் கழித்து அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த பயணி ஒருவரிடம் வீட்டிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என செல்போன் வாங்கி பேசியதாக தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் நாடகமாடிய சிறுவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.