×

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்

 

புதுச்சேரியில் தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதுச்சேரியில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3 ஆயிரத்து 410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தல் அவசியம். இருசக்கர வாகனம் விற்பனை செய்யும்போது அத்துடன் தரமான ஹெல்மெட் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும். எனவே எந்த வாகனம் ஓட்டும்போதும் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல்முறை ரூ.1,000 மட்டுமின்றி 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதியில்லை. சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டியதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின்கீழ் வழக்கும் தொடரப்படும். பொதுமக்கள் அனைவரும் தகுதியான ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.