×

கடத்தி சென்று திருமணம் செய்துவைப்போம்! காதலனின் தந்தை மிரட்டியதால் காதலி தற்கொலை

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே யுள்ள நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் மணிகண்டன். டிப்ளோமா முடித்துவிட்டு சென்னையில் தற்காலிக பணியில் உள்ள இவர் நூத்தப்பூர் கிராமத்தை ஒட்டிய விஜயபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது வீட்டருகே வசித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபள்ளி சிறுமியை கடந்த மூன்று மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பதினெட்டு வயது நிரம்பாத அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வீட்டை விட்டு அவரை அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என கை.களத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடிவந்தனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் 03 ஆம் தேதி காணாமல் போன சிறுமி திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் இருப்பதாக தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு வந்துள்ளனர். போலீசார் வருவதை கண்டதும் சிறுமியை விட்டுவிட்டு மணிகண்டன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிறுமி  18 வயது நிரம்பாததால் காவல்துறையினர் அவருக்கு அறிவுரைக் கூறி பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இம்மாதம் 25 ஆம் தேதி தனது வீட்டருகேயுள்ள ஓடையில் குளிக்க சென்ற சிறுமியிடம் மணிகண்டனின் குடும்பத்தார், மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதோடு சிறுமியின் வீட்டிற்கே சென்று தகாத வார்த்தையில் திட்டி அவரை கடத்தி சென்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து மனமுடைந்த சிறுமி வீட்டில் உள்ள களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். 


கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி  சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையில் சேலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன் சேலம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்து மங்களமேடு காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கில் தொடர்புடைய மணிகண்டனின் பெற்றோர் ராமசாமி, ராணி மற்றும் அவரது  சித்தப்பா வீரமுத்து அவரது மகன் மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக எச்சரித்துள்ளதால் நூத்தப்பூரில் ஏராளமான
போலீஸார் பாதுகாப்புக்காக பணியம் ர்த்தப்பட்டுள்ளனர்.