×

இன்ஸ்டாவால் சீரழியும் சிறுவர்கள்!மாணவியின் ஆடையில்லா வீடியோவை அவரது தந்தைக்கு அனுப்பிய 9ம் வகுப்பு மாணவர்கள்

 

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலைப் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் 9ஆம் வகுப்பு சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டி, ஆடை இல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று, அவற்றை அவளது தந்தைக்கு அனுப்பி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை அருகே உள்ள வாடகை வீட்டின் மேல் தளத்தில் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். உடல்நிலை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவர், அருகிலுள்ள உள்ள  தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவனின் நண்பர்கள் இருவர் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது மேல் தளத்தில் வசிக்கும் சிறுமியை அவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியைத் தேடி, அவரது புகைப்படங்களைப் பதிவிறக்கினர். புதிதாக ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி, சிறுமிக்கு நட்பு கோரிக்கை அனுப்பி, பேச்சைத் தொடங்கினர். பின்னர், “பள்ளியில் யாருடன் பேசுகிறாய், யாரை லவ் பண்றாய், உன் அக்கா யாருடன் பழகுகிறார் என அனைத்தும் எங்களிடம் வீடியோவாக இருக்கிறது” என மிரட்டினர்.

ஏற்கெனவே எடுத்திருந்த சிறுமியின் புகைப்படங்களை ஆடையின்றி மார்பிங் செய்து அனுப்பி, “இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். மேலும், “இதைத் தடுக்க வேண்டுமானால் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பு” எனக் கோரியுள்ளனர். பயந்துபோன சிறுமி, வேறு வழியின்றி தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த போலி ஐடிக்கு அனுப்பியுள்ளார். அதைப் பதிவிறக்கிய மூவரும், சிறுமியின் தந்தையின் மொபைல் எண்ணைப் பெற்று, அவரது வாட்ஸ்அப்புக்கு அந்தப் படங்களை அனுப்பி, “இவற்றை சமூக வலைதளங்களில் பரப்பினால் உங்கள் மானம் போய்விடும். இதைத் தடுக்க 10 லட்சம் ரூபாய் கொடுங்கள்” என மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கீழ் தளத்தில் உள்ள சிறுவனிடம் விசாரித்தபோது, மூவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் குழந்தைகள் கண்காணிப்பு மையத்தில் அடைத்தனர்.