அரசு பேருந்திலிருந்து 9 மாத குழந்தை விழுந்து பலியான சம்பவம்- ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பஸ்ஸின் முன்பக்க கதவை அடைக்காததால், 9 மாத ஆண் குழந்தை தவறி விழுந்து இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் சிவன்மணி மற்றும் நடத்துனர் பழனிசாமி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஸ்ரீ ரேணுகா என்ற மகளும், நவநீஸ் என்ற ஒன்பது மாத ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த சில வருடங்களாக ராஜதுரை, கோவை ராமநாதபுரத்தில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சொந்த ஊரான தருமபுரிக்கு ராஜதுரை அவரது மனைவி குழந்தைகளுடன் வந்து விட்டு, நேற்று முன்தினம் இரவு கோவை அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கோவை சென்று கொண்டிருந்தனர். ராஜதுரை தனது குழந்தை நவநீஸை தனது தோள் மீது வைத்துக்கொண்டு பேருந்தின் படிக்கட்டுக்கு எதிரே உள்ள சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை கண்டக்டரிடம் பஸ்ஸின் படிக்கட்டு கதவை அடைக்கக் கூறியுள்ளார் . ஆனால் கண்டக்டர் கதவை அடைக்கவில்லை .
இந்தநிலையில் பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வளையக்காரனுர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார். அப்போது ராஜுதுரையின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்பது மாத ஆண் குழந்தை நவநீஸ், கை நழுவி பஸ்ஸின் முன்பக்க படிக்கட்டில் விழுந்து சாலையில் விழுந்து இறந்து விட்டான். சிறுவனின் சடலத்தை தேவூர் காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து ஓட்டுனர் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவன் மணி (வயது 48) நடத்துனர் பழனிசாமி ( வயது 50) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் இவர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் . இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அலட்சியத்தால் குழந்தை இறந்தது காரணமாக ஓட்டுநர் சிவன்மணி மற்றும் நடத்துனர் பழனிசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.