×

8,70,00,000 இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் - மாணிக்கம் தாகூர்..!!

 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2014-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை அள்ளித்தருவோம் என்று இளைஞர்களிடம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி ஏமாற்றி வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2026-ல் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்பதும், 79.6 கோடி பேர் உழைக்கும் சந்தைக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வமாக அம்பலமானது.

படித்த பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேருக்கு மட்டுமே தகுதிக்குரிய வேலை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும், பட்டம் பெற்ற பெண்களிடம் 20.4 சதவீதம் வேலையின்மை நிலவுவதும் மோடி அரசின் விளம்பர அரசியலின் உண்மை முகத்தைக் காட்டியது.

ஒருபுறம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மருத்துவ ‘நீட்’ என்றால், மறுபுறம் இளைஞர்களை வேலைக்கே போகவிடாமல் நடுத்தெருவில் நிறுத்தும் சமூக-பொருளாதார ‘நீட்’ நெருக்கடி! தற்போது செப்டம்பர் 2026-ல் மத்திய புள்ளியியல் அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள மாவட்ட அளவிலான PLFS அறிக்கை, இந்த அவல நிலையை உள்ளூர் அளவில் மேலும் தோலுரித்துள்ளது.

நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 25 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் கல்வி அல்லது வேலையின்றி முடங்கிக் கிடக்கின்றனர். மொத்தமாக ஆய்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23.7 சதவீதம் பகுதிகளில் 30 சதவீதக்கும் அதிகமான இளைஞர்கள் எவ்வித எதிர்காலமுமின்றித் தவிக்கின்றனர். உ.பி., பீகார், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான மாவட்டங்கள் வேலையின்மையில் தத்தளிப்பதோடு, 75 சதவீதம் மாவட்டங்களில் இளம்பெண்களின் ‘நீட்’ விகிதம் 25 சதவீதத்தை தாண்டியுள்ளது.

மோடி அரசின் இந்த நிர்வாகத் தோல்வியும் புறக்கணிப்பும் தமிழ்நாட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தென் தமிழ்நாட்டின் முதன்மை நகரான மதுரையில் வேலையின்மை விகிதம் 7.0 சதவீதம் ஆக விஸ்வரூபமெடுத்துள்ளது. திருவள்ளூரில் 24.9 சதவீதம், திருச்சியில் 23. 9 சதவீதம், மதுரையில் 23.8 சதவீதம், சென்னையில் 22.4 சதவீதம் என இளைஞர்கள் முறையான வாழ்வாதார வழியின்றி முடங்கியுள்ளனர். கிராமப்புறத் தமிழ்நாட்டில் நிலையான ஊதிய வேலைகள் கிடைக்காமல், 30.4 சதவீதம் குடும்பங்கள் முறைசாரா தினக்கூலி வேலைகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்குவதாகக் கூறி புதிய கல்விக் கொள்கையைத் (NEP) திணிக்கும் மத்திய அரசு, களத்தில் அவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது.

தேசிய அளவில் 8.7 கோடி இளைஞர்களின் வாழ்வைச் சூறையாடியதோடு, மாவட்ட வாரியாகப் பல கோடி இளைஞர்களின் உழைப்பையும் ஆற்றலையும் வீணடித்து நடுத்தெருவில் நிறுத்தியுள்ள மோடி அரசின் பொருளாதாரத் துரோகங்களுக்கு, தங்களின் எதிர்காலத்தை இழந்து தவிக்கும் இந்த இளைய தலைமுறை ஒருபோதும் துணை நிற்காது!