தமிழகத்தில் இன்று +2 வகுப்பு பொதுத்தேர்வு: 8.27 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்..!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மார்ச் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனை 3,412 தேர்வு மையங்களில், பள்ளி மாணவர்கள் 7,99,692 மற்றும் தனித்தேர்வர்கள் 27,783 என மொத்தம் 8,27,475 பேர் தேர்வெழுதவுள்ளனர்.
தேர்வுகள் சரியாக காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 வரை நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கு காலை 10 மணிக்கு கேள்வித்தாள் கொடுக்கப்படும். அதில் இருந்து 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் 10.10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து தேர்வர்கள் கையொப்பம் இட வேண்டும். அதனை தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்கு துவங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.
அதே போல, கடந்த ஆண்டுகளில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்களுக்கு (Arrear) மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை 2,615 தேர்வு மையங்களில் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என மொத்தம் 25,051 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.
மேல்நிலைப் பொதுத்தேர்வினை 281 சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4900-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் அனைத்து தேர்வு நாட்களிலும் 9498383075 , 9498383076 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 578 அரசு, அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 30,663 மாணவர்கள், 33,696 மாணவிகள் என மொத்தம் 64,359 மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர். அதேபோல, 3,157 பேர் தனித் தேர்வர்களாகவும், புழல் சிறை உட்பட 250 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை சேகரிக்க 5 மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுப்பணியில் 250 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 250 துறை அலுவலர்கள், 550 பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள், 4,100 அறை கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1,000 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 6,150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தாண்டு முதல் கணக்குப்பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் சாதாரண கால்குலேட்டரை (Ordinary Calculator without Programming) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ‘சொல்வதை எழுதுபவர்’ சலுகையினை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு வழங்குவதற்கென 5 வினாத்தாள்கள் கொண்ட வினாத்தாள் உறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும், வெளிச்சம், காற்றோட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். தேர்வு மையத்தில் அந்தப் பள்ளியை சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றும் அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு தேர்வுக்கும் அறைக் கண்காணிப்பாளர்கள் காலை 8.45 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். உடன் தங்களது செல்போன் அணைத்து விட்டு (Switch Off) முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். செல்போன் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்காமல், தம்முடன் தேர்வறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் வசம் வைத்திருப்பதாகப் பின்னர் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
முதன்மைக் கண்காணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையைக் கண்டிப்பாக அணிய வேண்டும். மாணவர்கள் தேர்வின் போது ஒழுங்கினச் செயலலில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் ஒழுங்கீனச் செயல்கள் கண்டுபிடிக்கப்படும் போது காவல்துறையினருக்கு உடனடியாக புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.