×

2 டோஸ் தடுப்பூசி போடாத 7,762 பேருக்கு அனுமதி ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி!

 

கொரோனா 3ஆம் அலையில் இந்தியாவில் 8 மாநிலங்கள் மட்டுமே கவலைக்குரிய நிலைமையில் உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. அந்தளவிற்கு தமிழ்நாட்டை  கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே வாரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைந்து கொண்டே செல்கிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக சென்னை புறநகர் ரயில்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை புறநகர் ரயில்களில் பயணிக்கும் அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆகவே பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை ஸ்மார்ட்போனிலோ அல்லது காகித வடிவிலோ காண்பிக்க வேண்டும். ஒருவேளை சான்றிதழ் இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் அல்லது அனுமதி மறுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது. அதேபோல மாஸ்க் அணிந்திருக்கா விட்டாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இதையடுத்து தடுப்பூசி சான்றிதழ் காட்டியவர்களுக்கு மட்டுமே கவுன்டர்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இருப்ப்பினும் தடுப்பூசி செலுத்தாமல் பயணம் மேற்கொள்கிறவர்களை கண்டறிய அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த வகையில் ஜனவரி 10, 11ஆஅம் தேதிகளில் 2 டோஸ் தடுப்பூசி போடாத 7 ஆயிரத்து 762 பேரை ரயில்களில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மாஸ்க் அணியாதவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.