☰
×

மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் நகர்ப்புற பயிற்சி வளாக திட்டம் ரத்து: தவெக அரசு அதிரடி உத்தரவு

 

மாமல்லபுரத்தில் 74 ஏக்கரில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்தின் புதிய வளாகம் அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு.

மாமல்லபுரத்தில் அமையவிருந்த 74 ஏக்கர் பரப்பிலான 'தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள் நிறுவன' (Tamil Nadu Institute of Urban Studies) வளாகத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மாமல்லபுரத்தில் முன்மொழியப்பட்ட புதிய வளாகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களாலேயே இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே நிதி ஏலங்கள் (financial bids) திறக்கப்பட்டு, மிகக் குறைந்த ஏலத்தொகையை வழங்கிய நிறுவனம் (L1 bidder) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட டெண்டரை ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டெண்டருக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒப்பந்தப் புள்ளிகள் (Financial Bid) தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே திறக்கப்பட்டு, L1 எனப்படும் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இறுதி ஆணை மட்டுமே வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியின் கடைசி 6 மாதத்தில் இறுதி செய்யப்பட்ட அனைத்து டெண்டர்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக இந்த டெண்டரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இந்த திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை என்றும், மாறாக இன்னும் மேம்படுத்தப்பட்ட, பசுமை கட்டிட வடிவமைப்புடன் (Green Building Concept), அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய DPR தயாரிக்க புதிய டெண்டர் விரைவில் கோரப்படும் என்றும் நகராட்சி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.