×

70 ஐபிஎஸ் அதிகாரிகள் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

 

தமிழ்நாடு முழுக்க சுமார் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் Armed Force DGPயாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜி அன்பு, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி தமிழ்நாடு முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்குப் பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிலர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு முதன்மைச் செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ரா டிசம்பர் 31ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்யபிரத சாகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவிக்கு டாக்டர் கே.சு. பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நில நிருவாகம் ஆணையராக பழனிசாமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு இரா.கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தேவ் ராஜ் தேவ் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர் /மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவ் ராஜ் தேவ் வகித்து வந்த அறிவியல் நகர முதன்மைச் செயலாளர் பதவி ஹர் சஹாய் மீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹர் சஹாய் மீனா வகித்து வந்த ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் பதவிக்கு மலர்விழி நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், அவர் வகித்து வந்த அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி தலைவர் பதவி கோபால சுந்தர ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.. கோபால சுந்தர ராஜு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவி பானோத் ம்ருகேந்தர் லாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.