கூடுதல் கட்டணம் வசூலித்த 7 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்- 54 லட்சம் அபராதம் வசூல்
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு இயக்கப்பட்ட 4000 பேருந்துகளில் விதுமீறலில் ஈடுபட்ட 778 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 54 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து, 15.10.2026 வியாழக்கிழமையிலிருந்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீவிர தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கக் கட்டணம் ரூ.14,38,200/- நிர்ணயிக்கப்பட்டும், மற்றும் இணக்கக்கட்டணம் (Spot Fine) ரூ.3,83,500/- வசூலிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்து தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.54,78,073/- வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட தணிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் அதிகக் கட்டணம் (Excess Fare) வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 6 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும். இதனை உறுதிசெய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்:18004256151
புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து மீது போக்குவரத்து துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சுமார் 35 சிறப்பு தணிக்கைக் குழுக்கள் அமைத்து தொடர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
> 15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன.
> விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான்கள் வழங்கப்பட்டது.
> அதிகக் கட்டணம் வசூலித்த மற்றும் பிற குற்றங்களுக்காக 7 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டது.
> பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.