பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியில், விளையாட வாங்கித் தந்த பலூன் ஏழு மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த எமனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலவா நாயக்கன் பேட்டை இப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை - 29 சந்தியா - 23 தம்பதியினர் செங்கல் சூளைத் தொழிலாளர்களாகப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கவிப்பிரியா (3 வயது) மற்றும் ரேணுகா (7 மாதம்) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை சந்தியா வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விளையாடுவதற்காகக் குழந்தைகள் பலூன் கேட்டதால், தந்தை ஏழுமலை அவர்களுக்கு பலூன்களை வாங்கித் தந்துள்ளார். மூத்த மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 7 மாதக் குழந்தை ரேணுகா, எதிர்பாராத விதமாகத் தரையில் கிடந்த ஒரு பலூனை எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது. அந்தப் பலூன் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை திடீரென மயங்கி விழுந்தது.
குழந்தை மயங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சந்தியா, கதறித் துடித்தபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு ஓடினார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டுப் பெற்றோர் நிலைகுலைந்து போயினர். உயிரிழந்த குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லப் பெற்றோர் முயன்றனர். ஆனால், "குழந்தைகளின் மரணம் குறித்த முறையான காரணம் கண்டறியப்பட வேண்டும்" என்ற அரசின் விதிகளின்படி, பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலை ஒப்படைக்க முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் செங்கம் காவல்துறையினர் விரைந்து வந்து பெற்றோரைச் சமாதானப்படுத்தி, உடற்கூறாய்வுக்காகப் பிரேதப் பரிசோதனை அறைக்கு உடலை அனுப்பி வைத்தனர். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடிய சிறிய பொருட்கள், பலூன்கள் போன்ற ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்கு எட்டும் தூரத்தில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்" என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாசத்துடன் வாங்கித் தந்த விளையாட்டுப் பொருள், பிஞ்சு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.