×

மாணவர்களை உள்ளாடைகளுடன் விடுதியை சுற்றி வர வைத்து ராக்கிங்...7 சீனியர்கள் சஸ்பெண்ட்

 

வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை உள்ளாடைகளுடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராக்கிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூரில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள், புதிதாக சேர்ந்த மாணவர்களின் ஆடைகளை கழற்ற வைத்து, அவர்களை உள்ளாடைகளுடன் விடுதி வளாகத்தை சுற்றி வரை வைத்துள்ளனர். மேலும் அவர்க்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ராக்கிங் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் ராக்கிங்கில் ஈடுபட்ட 7 சீனயர் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும், இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.