6 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: மேஜையில் தலையை மோதி, செங்கல்லால் தாக்குதல்: 8 வயது சிறுவனால் படுகாயமடைந்த சிறுமியின் நிலை கவலைக்கிடம்..!!
சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 6 வயதான மாணவியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவியை அந்த சிறுவன் கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் தாக்குதலில் சிறுமி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
அச்சிறுமி பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், படுகாயமடைந்த சிறுமி சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று வெள்ளிக்கிழமை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியின் முடியைப் பிடித்து இழுக்கும் 8 வயது சிறுவன், அவளது தலையை வகுப்பறை மேஜையில் மீண்டும் மீண்டும் கொடூரமாக மோதுவது பதிவாகியுள்ளது.
மேலும் சிறுமி தரையில் விழுந்த பிறகும், அச்சிறுவன் அவளை எட்டி உதைப்பதும், தரையில் இழுத்துச் சென்று செங்கல்லால் தாக்குவதும் அந்த காட்சிகளில் தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் சிறுமி பலத்த ரத்த காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துக் குற்றப்பிரிவு துணை ஆணையர் (DCP) அம்ரிந்தர் சிங் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனுக்கு 8 வயதும், காயமடைந்த சிறுமிக்கு 6 வயதும் ஆகிறது என்பதை உறுதிப்படுத்தினார். இத்தாக்குதலுக்கான காரணம் குறித்துக் கேட்டபோது, அச்சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு (Medical Assessment) உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்களில் 7 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும், அதிலிருந்து வெளிவரும் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.