வீடு வீடாக விற்கப்பட்ட பானிபூரியை சாப்பிட்ட 6 வயது சிறுவன் பலி... 18 பேர் பாதிப்பு...!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பானிபூரியை சாப்பிட்டதில் 18 பேருக்கு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அந்த பானிபூரியை சாப்பிட்ட 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிடிஹ் நகரில், ஒரு நபர் விற்பனை செய்த பானிபூரியை சாப்பிட்டதால்தான் அந்த சிறுவன் உயிரிழந்தான் என்றும் 18 பேரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனரும் என்றும் போலீசார் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிதீவிரமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. வாந்தி, பேதி என கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் சர்தார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இச்சம்பவம் பஜ்தோ கிராமத்தில் (ஏப். 25) நடந்துள்ளது. இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், பாதிக்கப்பட்ட அனைவருமே ஒரே நபரிடம் இருந்துதான் பானிபூரி சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த நபர் வீடு வீடாக சென்று பானிபூரி விற்பனை செய்திருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 6 வயது சிறுவனின் உடல்நலம் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தான். அவனின் மறைவு பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமின் ஒட்டுமொத்த கிராமத்திற்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியருக்கிறது.