×

67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு..!

 

இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள சுண்ணாம்புக் குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குகைச் சுவரில் சிவப்பு நிறத்தில் பதிக்கப்பட்ட கை அச்சுகள் மற்றும் பறவை தலைகளுடன் கூடிய விசித்திரமான மனித உருவங்கள் இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன. கைகளைச் சுவரில் வைத்து அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், சில விரல் நுனிகள் கூர்மையாகத் தெரியும் வகையில் நுணுக்கமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குகை ஓவியங்கள் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெயினில் கண்டறியப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விட முற்பட்டது என்பதால், உலகின் மிகப்பழமையான குகை ஓவியமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன்னதாகத் தென் ஆப்பிரிக்காவில் 73,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அவை கற்களில் செதுக்கப்பட்டவை என்பதால், மனிதனால் வரையப்பட்ட ஓவியக் கலையின் மிகத் தொன்மையான சான்றாக இந்த இந்தோனேசிய ஓவியம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.