×

நான்கரை ஆண்டுகளில் 66,000 தொழில் முனைவோர்கள் உருவாக்கம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!! 

 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலான திறனாய்வுக் கூட்டம், சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் குறு, சிறு  மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள், முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியன குறித்து மாவட்டம் வாரியாக  அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டு, இலக்கினை விரைவில் அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் மாற்றுதிறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு  அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும் என்றும் அன்பரசன் கேட்டுக் கொண்டார். கடந்த 2023-2024 ஆம் ஆண்டு  தமிழ்நாடு அரசால் புதியதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டதின் கீழ் இதுவரை 2,970 பயனாளிகளுக்கு ரூபாய் 324 கோடி மானியத்துடன் ரூபாய் 581 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,452 பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடியே 45 லட்சம் மானியத்துடன் ரூபாய் 64 கோடியே 24 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல் படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட ஆறு வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 பயனாளிகளுக்கு   ரூபாய் ஐந்தாயிரத்து 490 கோடியே 80 லட்சம் கடன் வழங்கப்பட்டு அரசின் வாயிலாக ரூபாய் இரண்டாயிரத்து 133 கோடியே 26 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளதையும் அன்பரசன் குறிப்பிட்டார். 

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் MSME துறை சார்பில் 
63 ஆயிரத்து 573 கோடியே 11 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று குறிப்பிட்ட அமைச்சர், இதில் 2,610 நிறுவனங்கள் 27 ஆயிரத்து 312 கோடியே 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன என்றார். இதன் மூலம் 1,02,061 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களிலும் இலக்கினை எய்திடும் வகையில் துரிதமாக செயல்பட  வேண்டும் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கிட வழிவகை செய்திட வேண்டும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் துறையினரிடம் வலியுறுத்தினார்.